ஒரே நாளில் ரூ.1,900 கோடியை இழந்த இன்போசிஸ் நாராயணமூர்த்தி
இன்போசிஸ் பங்கு விலை கடுமையாக சரிவடைந்ததால் ஒரே நாளில் ரூ.1900 கோடியை நாராயண மூர்த்தி இழந்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனம் நேற்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதன்மூலம், டிசம்பர் காலாண்டில் சிறப்பான லாபத்தையும், வருவாயும் பதிவு செய்தாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ஈர்க்க தவறியுள்ளது.
நேற்று (ஜனவரி 17) இன்போசிஸ் பங்குகள் 5.8% குறைந்து, பிஎஸ்இயில் ரூ.1,815.10-ல் முடிவடைந்ததால் நாராயண மூர்த்தியின் குடும்பம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
இந்த சரிவின் காரணமாக நாராயணமுர்த்தி குடும்பத்திற்கு சுமார் ரூ.1,900 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸிஸ் நிறுவனத்தில் அவரது குடும்பம் மொத்தம் 4.02% பங்குகளை வைத்துள்ளது. இதில், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான என்.ஆர்.நாராயண முர்த்தி 0.40% பங்குகளையும், அவரது மனைவி சுதா முர்த்தி 0.92% பங்குகளையும், மகன் ரோகன் முர்த்தி 1.62% பங்குகளையும் வைத்துள்ளனர்.
அதோடு, அவரது மகளான அக்ஷதா முர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தில் 1.04% பங்குகளை வைத்துள்ளார்.
நேற்று சந்தை வீழ்ச்சிக்கு முன்னதாக, இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு ரூ.32,236 கோடியாக இருந்தது.
பின்னர், பங்கு விலை 6% சரிவடைந்ததால் நாராயண முர்த்தி குடும்பத்தினரின் பங்குகளின் மதிப்பு ரூ.30,334 கோடியாக குறைந்துள்ளது. இதனால், அவரது சொத்து மதிப்பில் ரூ.1900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.