இலங்கை
ஜனாதிபதி நிதியத்தின் நடைமுறையின் படியே கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக கூறும் ரணில்
2022 முதல் செப்டம்பர் 2024 வரையிலான தனது பதவிக் காலத்தில், அரசியல்வாதிகளின் மருத்துவ உதவிக்கான அனைத்து தனியார் கோரிக்கைகளும் ஜனாதிபதி நிதியத்தின் நிலையான நிர்வாக நடைமுறைகளின் படியே கையாளப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஒருவரை தவிர, எவரும் 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி உதவியைப் பெறவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன், தமது பதவிக் காலகட்டத்தில் செய்யப்பட்ட பல குறிப்பிடத்தக்க கொடுப்பனவுகளை அவர் கோடிட்டு காட்டியுள்ளார்.
இதன்படி, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவபிரிய பெரேராவின் இருதய அறுவை சிகிச்சைக்கு 1 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கொங்கஹகேவின் இருதய அறுவை சிகிச்சைக்கு 500,000 ரூபாய்கள் வழங்கப்பட்டன.
கேட்கும் கருவிகளை பெறுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சி. முத்துக்குமாரானாவுக்கு 400,000 ரூபாய்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஏ. ஜகத் குமாரவுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு 1 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டன.
மூத்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு சத்திரசிகிச்சைக்காக 5 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், மருத்துவ சிகிச்சைகளுக்காக ஜனாதிபதி நிதியம் 100 மில்லியன் ரூபாய்களுக்கும்; அதிகமான நிதி உதவியை வழங்கியுள்ளது என்றும் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதில் நோயாளிகள், விண்ணப்பதாரர்கள் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கான உதவிகளும் அடங்கியிருந்ததாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.