இலங்கை
முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் விளக்கமறியலில்
முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் விளக்கமறியலில்
மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (07) முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
லொஹான் ரத்வத்த தனது உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் அவர் ஓட்டிச் சென்ற ஜீப் மற்றுமொரு காருடன் மோதியதில் நேற்று (6) விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் லொஹான் ரத்வத்த மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தெரியவந்துள்ளது.
அதன்படி, மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 05ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.