இலங்கை
சீரற்ற காலநிலையினால் மோசமான பாதிப்புக்குள்ளான மன்னார்
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும்மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 812 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 681 நபர்கள் இன்று (1) வரை 28 நலன்புரி நிலையங்களில் வசித்து வருவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் நேற்று (30) வரை மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 19 ஆயிரத்து 811 குடும்பங்களைச் சேர்ந்த 68 ஆயிரத்து 334 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 ஆயிரத்து 263 நபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் 69 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில் படிப்படியாக வெள்ளம் குறைவடைந்தமையால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளுக்குச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று (1) மதியம் வரை 28 நலன்புரி நிலையங்களில் 812 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 681 நபர்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் தற்போது வரை 3 ஆயிரத்து 796 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 57 நபர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வசித்து வருவதாகவும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கரை கிராமத்தில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நடவடிக்கை காரணமாக பாரிய அனர்த்தத்தில் இருந்து அக்கிராமத்தில் இருந்து வீடு ஒன்றும், வீதியும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மடுக்கரை கிராமத்தில் இரு குளங்களில் இருந்து வான் ஊடாக வெளிவந்த நீர் மடுக்கரை கிராமத்தில் இருந்த வீடு ஒன்றின் ஊடாக ஊடறுத்து சென்ற நிலையில் குறித்த வீட்டில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டு வீடு இடிபாடுகளுக்கு உள்ளாகியது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு, நீர் வரத்தை முற்றாக தடுத்ததன் காரணமாக குறித்த அனர்த்தத்தில் இருந்து மடுக்கரை கிராமம், குறித்த வீடும் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரமின்றி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் உள்ளவர்களுக்கும் உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி (Vanni) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் (Mannar) மாவட்டசெயலகத்தில் நேற்றையதினம் (28.11.2024) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுற்று நிருபங்களின் படி அனைவருக்கும் உணவுப்பொருட்கள் வழங்க தற்போது நிதி மூலங்கள் எதுவுமில்லை எனத் தெரிவித்த மன்னார் மாவட்ட செயலர், ஆளுநர் மற்றும், கூட்டுறவு பிரதியமைச்சர் ஆகியோரிடம் 38மில்லியன் ரூபாய் நிதிக்கான கோரிக்கை தம்மால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிதி கிடைத்தால் மக்கள் அனைவரும் ஒருவாரத்திற்கு பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.
இறுகு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “வெள்ள அனர்த்தம் காரணமாக மன்னார் மாவட்டமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் நான் நேரடியாகச் சென்று பார்வையிட்டு மக்களோடும் கலந்துரையாடியிருக்கின்றேன்.
அந்தவகையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் தமது வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இந் நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்தால் மாத்திரம்தான் மக்களுக்கான உணவுப் பொருட்களோ, நிவாரணங்களோ வழங்கப்படும் எனச் சொல்லப்படுகின்றது.
இதனால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு உணவுப்பொருட்களோ நிவாரணங்களோ எந்த உதவிகளும் கிடைக்வில்லை எனச் சொல்லப்படுகின்றது.
எனவே இடைத்தங்கல் முகாமில் தாங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் மாத்திரமின்றி, வீடுகளிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உணவுப் பொருட்களையும், நிவாரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அத்தோடு மன்னாரைப் பொறுத்தவரையில் வாய்க்கால் சீரின்மை காரணமாகவே மிக மோசமான வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும் மக்கள் என்னிடம் முறையிட்டிருந்தனர்.
எனவே கழிவுநீர் வாய்க்கால் விடயத்திலும் உரிய திணைக்களங்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.