இலங்கை
பங்களாதேஷினுடைய அரசாங்க வீழ்ச்சி : இலங்கைத் தேர்தலை உற்றுநோக்கும் இந்தியா
பங்களாதேஷினுடைய அரசாங்க வீழ்ச்சி : இலங்கைத் தேர்தலை உற்றுநோக்கும் இந்தியா
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள முக்கிய ஜனாதிபதித் தேர்தலுக்கு இலங்கையின் வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில், இந்தியா மற்றும் சீனாவுடனான அதன் எதிர்கால உறவுகள் வெற்றியாளரின் கொள்கைகளிலேயே தங்கியிருக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், 2022 ஆம் ஆண்டின் அரசியல் கொந்தளிப்புக்குப் பின்னர் நாட்டின் முதல் ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும்.
மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் போட்டியாளர்களில், முன்னாள் ஆளும் குலத்தின் 38 வயது வாரிசான நாமல் ராஜபக்சவும் உள்ளடங்குகிறார்.
பிரபலமான போர்க்காலத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகனான அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி, தனது குடும்பத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயல்கிறார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐந்து தசாப்தங்களாக அவர் இணைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
2019 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரும் வேட்பாளர்களாக உள்ளனர்.
இந்தநிலையில் தேர்தலின் வெற்றியாளர் நாட்டின் பொருளாதார திசையை தீர்மானிப்பார் என்ற வகையில் வாக்கெடுப்பின் முடிவுகள், இலங்கையின் இரண்டு பிராந்திய அதிகார மையமான அண்டை நாடுகளுக்கு இடையே நாட்டின் நுட்பமான புவிசார் அரசியல் சமநிலையை மாற்றக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பெரும்பான்மையை இழந்தது மற்றும் பங்களாதேஷில் சேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் அந்த நாட்டுடன் ஏற்பட்டுள்ள இராஜதந்திர பதற்றம் என்பவற்றை அடுத்து, புதுடெல்லி, இலங்கையின் இந்த தேர்தலை மிக மிகக் கூர்மையான கண்களுடன் பார்க்கப் போகிறது என்று இலங்கையை தளமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவின் தலைமை ஆய்வாளர் உதித்த தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்க நுட்பமான புவிசார் அரசியல் நீரோட்டங்களை வழிநடத்தும் ஒரு திறமையான இராஜதந்திரியாக செயற்படுகிறார்.
ஈரானிய தலைவர்களுக்கு விருந்தளிப்பது முதல் செங்கடலில் ஹவுதிகளுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது வரை மோதலில் இருக்கும் நாடுகளுடன் இணக்கமான உறவைப் பேணுவதில் அவர் திறமையானவர் என்பதை நிரூபித்துள்ளார்.
அத்துடன் விக்ரமசிங்கவின் இந்திய சார்பு சாய்வு என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்திய ரூபாயுடன் நாணய ஒருங்கிணைப்புக்கான திட்டங்களைப் பற்றிப் பேசியுள்ளார் மற்றும் மோடியின் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் அதானி கூட்டு நிறுவனத்தைப் போன்ற உயர்மட்ட இந்திய முதலீடுகளை வரவேற்றுள்ளார்.
அதேநேரம் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் சீனா அவர்களுடன் உறவுகளில் ஈடுபட ஆர்வமாகவே இருக்கும் என்று மற்றுமொரு ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பீஜிங் இலங்கையில் ஆழமான ஊடுருவலை ஏற்படுத்தியுள்ளமையால், இலங்கையில் ஏற்படுத்தப்படும் தலைமையின் மாற்றம் அதன் மூலோபாய காலடியை சீர்குலைக்க வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி, அதன் கடுமையான இந்திய விரோத தளம் மற்றும் சீனாவுடனான அதன் நெருங்கிய உறவுகள் இந்தியாவுக்கு ஒரு பெரிய முள்ளாகவே இருக்கும் என்று சிந்தனையாளர் ஹரேந்திர பி திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.