இலங்கை
வளர்ச்சி பாதையில் இலங்கையின் பொருளாதாரம்
வளர்ச்சி பாதையில் இலங்கையின் பொருளாதாரம்
அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளால் 2023ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2.3 வீதமாக காணப்பட்டதுடன் இந்த வருடத்தில் அதனை 03 வீதமாக அதிகரிக்க முடியுமென எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி சந்ரனாத் அமரசேகர தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று (15.06.2024) நடைபெற்ற நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டின் மிக மோசமான பணவீக்கம் 2022 செப்டெம்பர் மாதத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அது நூற்றுக்கு 45 வீதத்தால் வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், கோவிட் தொற்று மற்றும் தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார கொள்கை மற்றும் தீர்மானங்களே இந்த நிலைக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் பல வருடங்களாக மேற்கொண்ட நடவடிக்கைகளின் பிரதிபலனே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடிகளின் பின்னர் அரசாங்கமும் மத்திய வங்கியும் பல முக்கிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தின. முதலாவதாக நிதி ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன் பின்னர், அதே வருடத்தில் நூற்றுக்கு 2 வீதத்தால் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டது. அதேபோன்று, மத்திய வங்கியினால் நிதி நிறுவனங்களின் நிலையான தன்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளை, அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் பல முக்கிய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
குறித்த மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மூலமான திட்டங்கள் தற்போது பயன் தர ஆரம்பித்துள்ளதாக சந்ரனாத் அமரசேகர கூறியுள்ளார்.