உலகம்
கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: வெளியான புதிய தகவல்!
கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: வெளியான புதிய தகவல்!
கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க தற்போது குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் கடந்த வார புதன்கிழமை இரவு நடந்த பயங்கர சம்பவத்தில் இலங்கையர் தர்ஷனி டிலந்திகா ஏகநாயக(Darshani Ekanyake (35)) மற்றும் இவரது நான்கு பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் இருந்து 2 மாதங்களுக்கு முன்பு வந்து, தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்த மற்றொரு இலங்கையர் அமரகூன் முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன்(Gamini Amarakoon Amarakoon Mudiyanselage, 40) என்பவரும் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தர்ஷினியின் கணவரான தனுஷ்க விக்கிரமசிங்க(Dhanushka Wickramasinghe) அதிர்ஷ்டவசமாக பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இலங்கையை சேர்ந்த 19 வயதான ஃபெப்ரியோ டி ஸோய்சா என்பவரே இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.// அவர் மீது தற்போது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பொலிஸார் தற்போது அவரை விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தலைவர் தனுஷ்க விக்ரமசிங்க தற்போது குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அவர் இந்த பயங்கர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து வெளியே வர பல ஆண்டுகள் ஆகும் என கனேடிய பௌத்த பேரவையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு நாளை(17ம் திகதி) பிற்பகல் ஒட்டாவாவில் நடைபெறும் என்றும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்கள் இரங்கல் குறிப்புகளை எழுதி வைக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறுதிச் சடங்கில் தனுஷ்க விக்ரமசிங்கவும் கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த துயரமான நேரத்தில் ஆதரவு அளித்த ஒட்டாவா மக்கள், கனேடியர்கள், இலங்கையர்கள் அனைவருக்கும் தனுஷ்க விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.