இந்தியா
சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா – மாலைதீவுடன் இணைய நடவடிக்கை!
சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா – மாலைதீவுடன் இணைய நடவடிக்கை!
இந்தியாவின் அயல் நாடான மாலைதீவில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவிலும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், மாலைதீவுக்கு நான்கு ரோந்து கப்பல்கள் மற்றும் விமானம் ஒன்றை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவுடனான பதற்றம் மற்றும் சீனாவுடனான மாலைதீவுகளின் நட்புறவு அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவும் செயலில் இறங்கியுள்ளது.
அமெரிக்காவின் உதவி வெளியுறவு செயலாளர் டொனால்ட் லூ (Donald Lu) அண்மையில் மாலைதீவுக்கு சென்றிருந்தார்.
இதையடுத்து, மாலைதீவு ராணுவத்திற்கு நான்கு ரோந்து கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் வழங்குவதாக டொனால்ட் லு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “மாலைதீவில் 1200 தீவுகள் உள்ளன.
இதன் பிராந்திய பரப்பளவு 53,000 சதுர கிலோமீட்டர். இது பிரான்சின் அளவு.
இந்த வகையில் மாலைதீவு ஒரு பாரிய நாடு. நாங்கள் மாலைதீவை ஒரு சிறிய நாடாகக் கருதுகிறோம். ஆனால் பாதுகாப்புத் தேவைகளைப் பற்றி பேசினால் அது மிகப் பாரியது.
இவ்வளவு பாரிய பகுதியின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் உபகரணங்களைச் செயல்படுத்த வேண்டும்.
இதை நிறைவேற்றுவதற்காக மாலைதீவுகளுக்கு நிகழ்நேர வணிக செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் ரோந்து படகுகள் மற்றும் விமானங்களை வழங்குவதற்கான முயற்சிகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
மாலைதீவு கடற்படைக்கு நான்கு ரோந்துப் படகுகள் வழங்கப்படும் என்றும், பிராந்திய பாதுகாப்புக்கு இந்த வளங்கள் முக்கியமானவை என்பதால், ஒரு விமானத்தை வழங்குவதற்கான விவாதங்கள் நடந்து வருகிறது“ என டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரோந்துப் படகுகளை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் சம்மதித்துள்ளதா இல்லையா என்பதை மாலைதீவு அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.