உலகம்
பிறந்த குழந்தைகளை வெளியேற்றும் இஸ்ரேல்
பிறந்த குழந்தைகளை வெளியேற்றும் இஸ்ரேல்
காசாவின் அல்-ஷிபா வைத்தியசாலையில் இருந்து குழந்தைகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியேற்றி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தாக்குதல் உச்சகட்டத்தை தொட்டுள்ள நிலையில், காசா நகரை முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேலிய பாதுகாப்பு படை கொண்டு வந்துள்ளது.
ஹாமஸ் அமைப்பை தாக்கும் முயற்சியில் இஸ்ரேலிய படைகள் களமிறங்கி இருப்பதால், பாடசாலைகள் , வைத்தியசாலைகள், மசூதிகள் ஆகிய அனைத்திலும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் தற்போது காசாவின் அல்-ஷிபா வைத்தியசாலையில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக தெரிவித்து வைத்தியசாலையை இஸ்ரேலிய இராணுவம் சுற்றி வளைத்துள்ளது.
அத்துடன் நோயாளிகளை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு படை உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக 2000 பேர் வைத்தியசாலைகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் குழந்தைகள் உட்பட தீவிர பாதிப்புகளுக்கு உள்ளான 291 நோயாளி கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அல்-ஷிபா வைத்தியசாலையில் சிக்கி தவித்த குழந்தைகளை ஐக்கிய நாடுகள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை இணைந்து வெளியேற்றியுள்ளது.
பிறந்த சில நாட்களே ஆன இந்த குழந்தைகள் சிகிச்சைக்காக எகிப்து நாட்டிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.