CSK அணியில் இவர் இல்லையா- திடீரென அறிவிக்கப்பட்டுள்ள பதவி விலகல்.

Csk Head Coach Stephen Fleming

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இந்த முடிவானது, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் பிளெமிங் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற கலந்தாலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடைசியாக 2023ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே, அதன் பின் தொடர்ச்சியாக வந்த மூன்று பருவங்களிலும் பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் தவித்து வருகின்றது.

இவ்வாறான பின்னணியில், தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ளார். 53 வயதான ஸ்டீபன் பிளெமிங், 2008ஆம் ஆண்டு ஆரம்ப IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வீரராக விளையாடியுள்ளார்.

அதன் பின்னர், 2009ஆம் ஆண்டு முதல் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று, 2026 வரை அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார்.

அவருடைய சிறந்த பயிற்சியின் கீழ் CSK அணி ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டத்தையும் வெற்றிகொண்டுள்ளதுடன், 12 தடவைகள் பிளே-ஆஃப் மற்றும் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும் அணியை வழிநடத்தியுள்ளார்.

பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டீபன் பிளெமிங், “18 ஆண்டுகள் என்பது என் விளையாட்டு வாழ்க்கையில் மறக்க முடியாத காலம்.

மிகுந்த நன்றியுடன் விடைபெறுகிறேன். பயிற்சியாளராக சிஎஸ்கேவுடன் இணைந்து பணியாற்றியது மிகச் சிறப்பான அனுபவம். நாங்கள் இணைந்து படைத்த சாதனைகள் குறித்து பெருமை கொள்கிறேன். அந்த நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்திருக்கும்” என உருக்கமாக கூறியுள்ளார்.

Exit mobile version