கால்பந்து வரலாற்றில் தனது 1,000-வது கோலை எட்டும் வரை தான் ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அல் அக்தூத் அணிக்கு எதிரான போட்டியில், ரொனால்டோ இரட்டை கோல்களை அடித்துத் தனது அல் நாசர் அணியை 3–0 என்ற கணக்கில் வெற்றிபெறச் செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் தனது கால்பந்து வாழ்வில் (நாடு மற்றும் கழகங்கள் இணைந்து) அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 956 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடைபெற்ற உலக கால்பந்து விருது விழாவில், ‘சிறந்த மத்திய கிழக்கு வீரர்’ விருதை வென்ற பின் ரொனால்டோ பேசியதாவது. “தொடர்ந்து ஆடுவது கடினமாக இருந்தாலும், அதற்கான ஆர்வம் என்னிடம் குறையவில்லை. எனது இலக்கு 1,000 கோல்களை எட்டுவதுதான். பாரிய காயங்கள் எதுவும் ஏற்படாவிட்டால், அந்த மைல்கல்லை நான் நிச்சயம் அடைவேன்.”
அல் நாசர் கழகத்துடன் தனது ஒப்பந்தத்தை 2027 வரை நீடித்துள்ள ரொனால்டோ, 42 வயது வரை களத்தில் இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. ரியல் மெட்ரிட் (450 கோல்கள்) மற்றும் போர்த்துக்கல் (143 கோல்கள்) அணிகளுக்காக அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனை இவரிடமே உள்ளது.
நான்கு வெவ்வேறு கழகங்களுக்காக (மான்செஸ்டர் யுனைடட், ரியல் மெட்ரிட், ஜூவான்டஸ், அல் நாசர்) தலா 100-க்கும் மேற்பட்ட கோல்களைப் பெற்ற ஒரே வீரர் இவராவார்.
வயது என்பது வெறும் இலக்கம்தான் என்பதை மீண்டும் நிரூபித்து வரும் ரொனால்டோவின் இந்த 1,000 கோல் இலக்கு, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

