இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான மீறல்களின் ஒரு பகுதி’ என ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இந்தப் பாலியல் வன்முறைகள் சர்வதேசச் சட்டத்தின்படி போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு (Crimes against Humanity) சமமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
போரின் முடிவில் தமிழ்ப் பெண்கள் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நீண்டகாலமாக அறியப்பட்டவை. எனினும், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் இவற்றைத் திட்டமிட்டுப் புறக்கணித்து, குற்றவாளிகளைப் பாதுகாத்து வந்ததாக ஐநா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பெண்கள் மட்டுமன்றி ஆண்களுக்கு எதிராகவும் இவ்வாறான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இவர்களில் உயிர் பிழைத்தவர்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் வழங்குவது அரசின் அவசரத் தேவையாகும்.
இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய துணை இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறுகையில், “குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்துவதையும், விசாரணைகளை முடக்குவதையும் விடுத்து, பொறுப்பானவர்களைத் தண்டிப்பதில் இலங்கை அரசு தீவிரம் காட்ட வேண்டும். சர்வதேச நாடுகள் இதற்கான அழுத்தங்களை முடுக்கிவிட வேண்டும்.”
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வெளிநாட்டு அரசாங்கங்கள் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என HRW கோரியுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட தடைகளை (Targeted Sanctions) விதித்தல். சர்வதேச ரீதியிலான குற்றவியல் விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடுப்புகளை ஆரம்பித்தல்.
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இலங்கையின் சர்வதேசப் பங்காளிகள் ஒன்றிணைந்து செயற்படுதல்.

