ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் விசாரணைக்குள்ளான சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்!

Easter Sunday attacks

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் (Easter Sunday Attack) தொடர்பில் இலங்கை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர், தற்போது ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) தஞ்சம் கோரி வருவதாகப் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சந்தேகநபர் 2022 ஆம் ஆண்டில் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதே ஆண்டில், அவர் இலங்கையிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்று அங்குத் தஞ்சம் கோரியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அந்நாட்டு நீதிமன்ற விசாரணையில், “2022 ஜனவரி 5 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் இலஞ்சம் கொடுத்து விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் 2022 செப்டம்பர் 2 ஆம் திகதி அவர் இலங்கையிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் 2022 செப்டம்பர் 15 ஆம் திகதி அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதுடன், மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்ப நேரிட்டால், இலங்கை பொலிஸாரால் சித்திரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக நேரிடும் என்று கூறியுள்ளார். அவருடன் அவரது மனைவியும் தஞ்சம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது தஞ்சம் கோரிக்கைகளை முதலில் அந்நாட்டு உள்துறை அலுவலகம் நிராகரித்த போதிலும், சந்தேகநபர் மீண்டும் அது தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும், தற்போது அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட இந்தத் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பிரித்தானியப் பிரஜைகளும் அடங்குவர். கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த பிரித்தானியப் பிரஜைகளில் 42 வயதுடைய அனிதா நிக்கல்சன் மற்றும் அவரது பிள்ளைகளான 14 வயதுடைய அலெக்சாண்டர், 11 வயதுடைய அனபெல் ஆகியோரும் அடங்குவர்.

Exit mobile version