இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (06) டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை வழமையான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே அவர் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். எனினும், பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், அவரை உள்நோயாளியாகத் தங்கிச் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
தற்சமயம் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் (Medical Observation) வைக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தேவையான மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கங்கா ராம் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கையில், “அவரது உடல்நிலையில் தற்போது அச்சப்படும் வகையில் பாரிய பாதிப்புகள் ஏதுமில்லை. தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சையின் பின்னர் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார்.”
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினரும் பல்வேறு அரசியல் தலைவர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டிச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

