பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது சுமத்தப்பட்டுள்ள புதிய தேசத் துரோக வழக்கில், வரும் ஜனவரி 21-ஆம் திகதி முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் விளைவாகப் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். மாணவர் போராட்ட வன்முறைகள் தொடர்பான வழக்கில் அவருக்கு ஏற்கனவே சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.
2024 டிசம்பரில், ‘ஜாய் பங்களா பிரிகேட்’ என்ற அமைப்பு நடத்திய ஆன்லைன் கூட்டத்தில் ஹசீனா பங்கேற்றுள்ளார்.
முகமது யூனுஸ் தலைமையிலான தற்போதைய இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகவும், உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டதாகவும் அவர் மீது புதிய வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தத் தேசத் துரோக வழக்கிலேயே வரும் 21-ஆம் திகதி நீதிமன்ற நடவடிக்கைகள் தீவிரமடையவுள்ளன.
பங்களாதேஷில் இருந்து தப்பியோடிய பின்னர் ஷேக் ஹசீனா மீது அடுத்தடுத்துத் தொடரப்படும் இந்த வழக்குகள், அவரை மீண்டும் பங்களாதேஷிற்கு நாடு கடத்துவதற்கான அழுத்தங்களை அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.