மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

1739116331 energy min

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருவதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் ஒரு மின் அலகின் சராசரி உற்பத்திச் செலவு 37 ரூபாவாக இருந்தது. தற்போது இந்தச் செலவு 29 ரூபாவாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மின் அலகின் சராசரிச் செலவை 25 ரூபாவாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த இலக்கை எட்டினால், மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 32 சதவீதத்தால் குறைக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 2024 ஜூலை மாதம் மின் அலகு ஒன்றின் விலை 37 ரூபாவாக இருந்தபோது, மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்ததை நினைவு கூர்ந்தார்.

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் ஏற்படக்கூடிய 13,094 மில்லியன் ரூபா பற்றாக்குறையை ஈடுகட்ட, மின்சாரக் கட்டணத்தை 11.57 சதவீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version