அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் கட்டியெழுப்பப்பட்ட பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளைச் சிதைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
“ஒருவர் மீதான தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதல்” என்ற நேட்டோவின் அடிப்படை விதியையே டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நகர்வு அச்சுறுத்துகிறது. டென்மார்க் ஒரு நேட்டோ உறுப்பு நாடு என்பதால், அமெரிக்கா அந்த நாட்டின் மீது இராணுவ அழுத்தம் கொடுப்பது கூட்டணியின் பிளவுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ இராணுவத் தலையீடு குறித்த கவலைகளைக் குறைத்துக் காட்ட முற்பட்டாலும், “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன” என்ற வெள்ளை மாளிகையின் அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிரீன்லாந்து “விற்பனைக்கு அல்ல” என டென்மார்க் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பல ஐரோப்பியத் தலைவர்கள் இன்னும் வெளிப்படையான கருத்துக்களைக் கூறாது மௌனம் காத்து வருகின்றனர். இதற்கான முக்கிய காரணங்களாகப் பின்வருவன பார்க்கப்படுகின்றன:
ரஷ்யாவுடனான மோதல் போக்கிற்கு மத்தியில் ஐரோப்பாவிற்கு அமெரிக்காவின் இராணுவ பலம் இன்றியமையாதது.
அமெரிக்கா இனி ஒரு நம்பகமான கூட்டாளியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தற்போதைய சூழலில் அது ஒரு ‘அவசியமான’ கூட்டாளியாகவே உள்ளது.
அமெரிக்கா தனது சொந்த நேட்டோ நட்பு நாடான டென்மார்க்கிற்கு எதிராக இராணுவ ரீதியான தெரிவுகளைப் பரிசீலித்தால், அது நேட்டோ அமைப்பின் முடிவாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா – ஐரோப்பா இடையிலான நீண்டகால பாதுகாப்புப் பிணைப்பு தற்போது ஒரு பெரும் சோதனையைச் சந்தித்து வருகின்றது.