கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (நவம்பர் 21) உத்தரவிட்டது.
கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. புஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் குழு ‘ஜூம்’ (Zoom) தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
விசாரணையில் முக்கிய முன்னேற்றமாக வேறு ஒரு சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுபுன் பிரதீப் குமார் என்பவரை இவ் வழக்கின் 35ஆவது சந்தேக நபராகப் பெயரிட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் அதிகாரி கேட்டுக்கொண்டார்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதவான், குறித்த சந்தேக நபரை மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தச் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேலும் கூறுகையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்தப்படும் எனக் குறிப்பிட்டனர்.
அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை டிசம்பர் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு, அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கையிடுமாறு கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

