கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவனெல்லயிலிருந்து கேகாலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, மொலகொட பகுதியில் பயணி ஒருவரை இறக்கிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்க முயன்றது.
இதன்போது, பின்னால் வந்த பூண்டுலோயா டிப்போவிற்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபைப் (SLTB) பேருந்து, தனியார் பேருந்துடன் மோதியது.
அதே சமயம் கொழும்பு நோக்கிப் பயணித்த கொள்கலன் லாரி ஒன்றும் இ.போ.ச பேருந்தின் பின்புறம் மோதியுள்ளது. இதன் தாக்கத்தினால் கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து, தனியார் பேருந்தை மீண்டும் மோதித் தள்ளிக்கொண்டு சென்று அருகில் இருந்த வயல் பகுதிக்குள் கவிழ்ந்தது.
இந்தக் கோர விபத்தில் சிக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 6 பயணிகள் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காகக் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாகக் கொழும்பு-கண்டி பிரதான வீதியின் போக்குவரத்துச் சுமார் ஒரு மணிநேரம் வரை பாதிக்கப்பட்டது. சாரதிகளின் கவனக்குறைவு அல்லது வேகக் கட்டுப்பாடு மீறப்பட்டதா என்பது குறித்து கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.