தேங்காய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடி விற்பனை!

Coconut Daily Ceylon

நாட்டில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், வெளிச்சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான விலை உயர்வைக் கட்டுப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை (CCB) நேரடித் தலையீட்டை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு தேங்காய் 122 – 124 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. எனினும், வெளிச்சந்தையில் நுகர்வோருக்கு ஒரு தேங்காய் 180 – 200 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்கி நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் இடைத்தரகர்களே இந்த விலை உயர்விற்குப் பொறுப்பு என தென்னை பயிர்ச்செய்கை சபையின் பணிப்பாளர் சுனிமல் ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இடைத்தரகர்களின் சுரண்டலைத் தவிர்க்க, இந்த ஆண்டு முதல் மாவட்ட ரீதியாக நேரடியாகத் தேங்காய்களை விற்பனை செய்ய சபை திட்டமிட்டுள்ளது. சபையினால் நிர்வகிக்கப்படும் 11 தென்னந்தோட்டங்களில் இருந்து பெறப்படும் தேங்காய்கள் எவ்வித இடைத்தரகர்களுமின்றி நேரடியாக நுகர்வோருக்கு வழங்கப்படும்.

முன்னர் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் விற்பனைச் சேவையைப் போன்று, இம்முறை அனைத்து மாவட்டங்களிலும் நியாயமான விலையில் தேங்காய்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2,900 மில்லியனாக இருந்த தேங்காய் உற்பத்தி, இந்த ஆண்டு 3,000 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூச்சிகள் மற்றும் விலங்குகளால் ஏற்படும் 10 சதவீத அறுவடை இழப்பைத் தடுக்க விசேட பாதுகாப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

Coconut Prices Sri Lanka, CCB Direct Sales, Coconut Auction Prices, Sunimal Jayakody, Mobile Coconut Sales.

Exit mobile version