மீரிகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பஜங்கொட பகுதியில் இரகசியமான முறையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீரிகம காவல்நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பஜங்கொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காவல்துறையினர் அதிரடிச் சோதனையை முன்னெடுத்தனர். இதன்போது, மதுபானம் காய்ச்சிக் கொண்டிருந்த நிலையில் குறித்த பெண் பிடிபட்டார்.
இந்தச் சோதனையின் போது சட்டவிரோத மதுபான உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட கோடா 1080 லீற்றர், 109 மதுபான போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த 81 லீட்டர் கசிப்பு, மதுபானம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் கொள்கலன்கள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர் அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நீண்டகாலமாக இவர் இந்த சட்டவிரோதத் தொழிலில் ஈடுபட்டு வந்தாரா அல்லது இதன் பின்னணியில் ஏனைய நபர்கள் உள்ளனரா என்பது குறித்து மீரிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

