திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை: 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் கடற்கரையில் அனுஷ்டிப்பு!

26 6958b2e786c0e

திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, அவர்கள் படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்பாக இந்த நினைவேந்தல் நேற்று (02) மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நிழற்படங்கள் காந்தி சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டு, சுடரேற்றி மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி, திருகோணமலை கடற்கரையில் தங்கியிருந்த ஐந்து தமிழ் மாணவர்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், இலங்கையில் இடம்பெற்ற மிக முக்கியமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இருபது ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இந்தப் படுகொலைச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய உறவினர்கள், சர்வதேச சமூகம் தமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினர்.

 

 

Exit mobile version