உலகம்
“ஆதித்யா- எல்1” விண்கலம் சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்யும்?
“ஆதித்யா- எல்1” விண்கலம் சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்யும்?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக ‘ஆதித்யா- எல்1’ என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 2-ந்தேதி பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளது.
இதற்கான இறுதிக்கட்டப்பணியான ‘கவுண்ட்டவுன்’ வருகிற 1-ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ‘ஆதித்யா- எல்1’ விண்கலத்தின் செயல்பாடுகள் என்ன?, இது சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்ய இருக்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
‘ஆதித்யா- எல்1’ விண்கலத்தில் சூரியனின் கொரோனா, ‘குரோமோஸ்பியர், போட்டோஸ்பியர்’ மற்றும் சூரியக் காற்று ஆகியவற்றை ஆய்வு செய்ய 7 கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கருவிகள் ‘கரோனல்’ வெப்பமாக்கல் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பண்புகள், விண்வெளி வானிலையின் இயக்கவியல், துகள் மற்றும் புலங்களின் பரவல் போன்றவற்றை புரிந்து கொள்வதற்கான மிக முக்கியமான தகவல்களை வழங்கும்.
4 ‘ரிமோட் சென்சிங்’ கருவிகள் சூரியனின் வளிமண்டலத்தை ஒளியின் வெவ்வேறு அலை நீளங்களில் படம் பிடிக்கும். இதில் புலப்படும், புற ஊதா மற்றும் எக்ஸ் கதிர்களும் அடங்கும். சூரிய கொரோனாவை படம் பிடித்து அதன் இயக்கவியலையும் ஆய்வு செய்யும்.
‘சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப்’, ஒளிக்கோளம் மற்றும் ‘குரோமோஸ்பியரை’ குறுகிய மற்றும் அகன்ற அலைவரிசையில் உள்ள புற ஊதா அலை நீளங்களில் படம் பிடிக்கும் தன்மை கொண்டது.
அதேபோல் ‘சோலார் லோ எனர்ஜி எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்’ சூரியனில் இருந்து மென்மையான எக்ஸ்ரே உமிழ்வை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ‘ஹை எனர்ஜி எல்-1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்’ கருவி சூரியனில் இருந்து கடின எக்ஸ்ரே உமிழ்வை ஆய்வு செய்யும்.
அதில் உள்ள 3 இன்-சிட்டு கருவிகள் சூரியக் காற்றின் கலவை, இயக்கவியல் மற்றும் காந்தப்புலத்தை அளவிடும். சூரியக் காற்றின் துகள் பரிசோதனை, சூரியக் காற்றின் கலவை மற்றும் இயக்கவியலை ஆய்வு செய்யும். விண்கலத்தில் உள்ள பிளாஸ்மா அனலைசர் தொகுப்பு கருவி சூரியக்காற்றின் பிளாஸ்மா பண்புகளை அளவிட இருக்கிறது.
மேம்பட்ட ‘டிரை- ஆக்சியல் ஹை-ரெசல்யூஷன் டிஜிட்டல்’ காந்தமானிகள் சூரிய காற்றில் உள்ள காந்தப்புலத்தை அளவிட்டு தகவல்களை அளிக்க இருக்கிறது.
இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.