நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள போதிலும், அவர்கள் குறித்து யாரும் அக்கறைகொள்ளவில்லை என மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலாம் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் (டிசம்பர் 13, சனிக்கிழமை) மன்னாரிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி, கடற்றொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்.எம்.ஆலாம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்பட்டதோடு, மன்னார் மாவட்டம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. மன்னார் தீவில் அதிகளவான கிராமங்கள் கடற்றொழிலாளர் கிராமங்களாகக் காணப்படுகின்றன.
தேவன் பிட்டி தொடக்கம் முள்ளிக்குளம் வரை உள்ள கடற்றொழிலாளர்களும் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“கடற்றொழிலாளர்களின் பாதிப்புகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பேசப்படவில்லை என்ற முறைப்பாடுகள் கிராம மட்டக் கடற்றொழிலாளர் அமைப்புக்கள் ஊடாகச் சமாசத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.”
இது தொடர்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

