தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி ஏமாற்றம்: நாளாந்த வேதனம் குறித்து வடிவேல் சுரேஷ் கருத்து

download

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், இந்த முறை தீபாவளிக்கு மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறித்து ஜனாதிபதி பண்டிகைக் காலத்தில் நற்செய்தி கிடைக்கும் என்று கூறியதாகவும், ஆனால் அந்த எதிர்பார்ப்பு தற்போது தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஏற்கெனவே முதலாளிமார் சம்மேளன அதிகாரிகளுடன் தொழிலாளர் வேதனம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இன்று நடைபெற்ற வேதன நிர்ணய சபை கலந்துரையாடலில் முதலாளிமார் சம்மேளனம் கலந்துகொள்ளாதது, அரசாங்கத்தின் அழைப்பை உதாசீனம் செய்ததாகவே கருதப்படுகின்றது என்று சுரேஷ் தெரிவித்தார். இந்த விடயம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்தில் ஒரு பெரிய தோல்வியைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 நாளாந்த வேதனம் தருவதாக அரசாங்கம் அளித்த உறுதிமொழியைத் தாங்கள் இன்னும் நம்பியிருப்பதாகவும், வருட இறுதிக்குள் ஜனாதிபதி கூறியதுபோல குறித்த வேதனத்தைப் பெற்றுத் தருவார் என நம்புவதாகவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

Exit mobile version