யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு சிறுவன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்று (21) இரண்டு இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்றுள்ளனர். வீதி வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்டபோது, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் இவர்கள் மோதி விபத்துக்குள்ளாகினர்.
இந்த விபத்தில் புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் வினோஜன் (25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் தலைக்கவசம் அணியாததால் தலையில் ஏற்பட்ட பலத்த காயமே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களின் சிறிய மகன் ஆகிய மூவருடன், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்த மற்றுமொரு இளைஞரும் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பண்டிகைக் காலத்தில் வீதிகளில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிவதையும், வேகக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதையும் உறுதி செய்யுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.