வெனிசுலாவின் தற்போதைய இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாவிட்டால் மிகக்கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை வெனிசுலாவுக்கே நேரில் சென்று அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் கைது செய்தன. அவர்கள் தற்போது நியூயோர்க்கின் புரூக்ளின் (Brooklyn) சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுரோவே வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி என முழங்கிய துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இதற்கிடையே, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் டெல்சியை இடைக்கால ஜனாதிபதியாக நியமித்துள்ளது.
டெல்சியின் கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்.
“டெல்சி ரோட்ரிக்ஸ் சரியானதைச் செய்யத் தவறினால், அவர் கொடுக்கப்போகும் விலை மிகப்பெரியதாக இருக்கும். அது இப்போது சிறையில் இருக்கும் மதுரோ சந்திப்பதை விடவும் மோசமானதாக இருக்கும்.”
வெனிசுலாவின் எதிர்காலம் குறித்துக் கேட்டபோது, அங்கு நடப்பதை “ஆட்சி மாற்றம்” அல்லது “மறுகட்டமைப்பு” என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் என்றும், தற்போதுள்ள நிலையை விட மோசமாக எதுவும் நிகழ்ந்துவிட முடியாது என்றும் அவர் கூறினார்.
இதே சந்திப்பில் மற்றுமொரு அதிரடித் தகவலையும் டிரம்ப் பகிர்ந்துள்ளார். அமெரிக்கத் தலையீட்டுக்கு உள்ளாகும் கடைசி நாடு வெனிசுலா கிடையாது எனக் குறிப்பிட்ட அவர், டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து (Greenland) தீவு அமெரிக்காவிற்குத் தேவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். அந்தத் தீவை ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் சூழ்ந்துள்ளதால், பாதுகாப்பு கருதி அதனைப் பெற அமெரிக்கா விரும்புவதாகத் தெரிவித்தார்.

