மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானையும் அவரது பெயரிலான ஞாபகார்த்த மண்டபத்தையும் விமர்சித்த அரசாங்கத்தின் மலையகப் பிரதிநிதிகளுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான ஜீவன் தொண்டமான் இன்று (23) நாடாளுமன்றத்தில் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான் சாடினார். “சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மண்டபம் 2005-ல் உருவாக்கப்பட்டது. அப்போது தற்போதைய ஜனாதிபதியும் அமைச்சரவையில் இருந்தார். உண்மையை மறைத்துப் பேச வேண்டாம். தொண்டமான் பெற்றுக்கொடுத்த பிரஜாவுரிமையால் தான் இன்று நீங்கள் சபைக்கு வந்து வாய்கிழியப் பேசுகிறீர்கள்” என அவர் சுட்டிக்காட்டினார்.
பண்டாரநாயக்க, காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்களின் பெயரிலான மண்டபங்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களே தலைவர்களாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஞாபகார்த்த மன்றங்களின் பெயர்களை மாற்றுவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
“முன்னாள் தலைவர்களை ‘சாபம்’ என்று பேசுவது வீரமல்ல; அது அரசியல் சுயநலம் மற்றும் தலைக்கனத்தால் வரும் முட்டாள்தனம். நாட்டுக்குச் சேவையாற்றியவர்களின் பெயர்கள் தான் மன்றங்களுக்குச் சூட்டப்படுமே தவிர, நாட்டை அழித்தவர்களின் பெயர்கள் அல்ல” என்று அவர் அதிரடியாகக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு ‘வால் பிடித்து’ வெற்றி பெற்று சபைக்கு வருவது புத்திசாலித்தனம் அல்ல எனவும், முதலில் அரசாங்கம் என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொள்ளுமாறும் அவர் அரசாங்கத் தரப்பு மலையக உறுப்பினர்களைச் சாடினார்.
மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துக் கவனம் செலுத்தாமல், வரலாற்றைத் திரிபுபடுத்திப் பேசுவதைத் தவிர்க்குமாறு அவர் இதன்போது வலியுறுத்தினார்.