ஏமன் நாட்டில் உள்ள அல்மாரா பாலைவனத்தின் நடுவே ஒரு மர்மக் கிணறு அமைந்துள்ளது.
குறித்த கிணறு 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.
இந்த கிணற்றை அப்பகுதி மக்கள் ‘பர்ஹட்டின்‘ கிணறு என அழைக்கின்றனர்.
குறித்த கிணற்றிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதால் அதில் பூதம் இருப்பதாக வதந்தி பரவியது.
இந்த வதந்தியை தொடர்ந்து ஏமன் நாட்டைச் சேர்ந்த 10 பேர் கொண்ட ஆராய்ச்சிக் குழுவினர் அந்தக் கிணற்றில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக ஆய்வுக்குழு தலைவர் தெரிவிக்கையில், “இந்தக் கிணறு குகைபோல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்று இருக்கிறது. மேலும் அதிகமான பாம்புகள், இறந்த விலங்குகள் மற்றும் குகை முத்துக்கள் இருக்கின்றன. இங்கு எந்த பூதமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் பறவைகள், விலங்குகள் அதிகமாக இறந்து கிடப்பதாலேயே இப்பகுதி துர்நாற்றம் வீசுவதாகவும், பல மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த கிணறு ஏமன் நாட்டிற்கான ஒரு புதிய வரலாற்றை எழுதும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இப் பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் இறுதி முடிவுகள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.