இலங்கையில் LGBTQ+ சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி அளித்து, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் வெளியிடப்பட்ட கடிதத்தை செயலற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (நவம்பர் 14) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் குணதாச அமரசேகர, அதன் செயலாளர் வசந்த பண்டார உள்ளிட்ட குழுவினர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
சட்ட மாஅதிபர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவர், ஈக்வல் கிரௌண்ட் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
LGBTQ+ சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை அங்கீகரித்த சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவர் வெளியிட்ட அந்தக் கடிதத்தை செயலற்றதாக்கும் எழுத்தாணை (Writ of Mandamus) மற்றும் அத்திட்டத்தைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவு ஆகியவற்றைப் பிறப்பிக்கக் கோரி மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி கனிஷ்க விதாரண, LGBTQ+ சமூகத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான பிரதிவாதிகளின் முயற்சி முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பை மீறுவதாகும் என்று குற்றம் சாட்டினார்.
இந்தக் கடிதம் குறித்த தகவல்கள் வெளியான பின்னர், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகியோர், இலங்கையில் LGBTQ+ சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்று பாராளுமன்றத்தில் அறிவித்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கத்தின் கொள்கையை மீறி, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தன்னிச்சையாகச் செயல்பட்டுக் கடிதத்தை வெளியிட்டதாகவும், இதன் மூலம் அரசியலமைப்பின் ஏற்பாடுகளையும், தண்டனைச் சட்டக் கோவையின் ஏற்பாடுகளையும் மீறியுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்காலத் தடை உத்தரவு பெறுவது குறித்து வினவியது. அதற்கு மனுதாரர்கள் தரப்பு ஒப்புதல் அளித்த நிலையில், பிரதிவாதிகளுக்கு அறிவித்து அவர்களுக்கு அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனுவின் உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக அடுத்த விசாரணை பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.