6ஆவது தடவையாக ஹவுதி கிளா்ச்சியாளா்களை தாக்கிய அமெரிக்கா

tamilnih 94

6ஆவது தடவையாக ஹவுதி கிளா்ச்சியாளா்களை தாக்கிய அமெரிக்கா

யேமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 6-யாக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

யேமனில் ஹவுதி கிளா்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில பகுதிகளில் இருந்து பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்கள், சா்வதேச சரக்குக் கப்பல்களுக்கு உடனடி அச்சுறுத்தல் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்தே தற்காப்பு கருதி அந்த நிலைகள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றிய ஹவுதி பழங்குடியின கிளா்ச்சியாளா்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இந்தச் சூழலில், காஸா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இஸ்ரேல் தொடா்பான கப்பல்கள் மீதுதான் தாக்குதல் நடத்தப்போவதாக முதலில் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் கூறியிருந்தாலும், நாளடைவில் இஸ்ரேலுடன் தொடா்பில்லாத கப்பல்களும் அந்தப் படையினரின் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.

அதையடுத்து, செங்கடலில் தாக்குதல் நடத்தும் ஹவுதி படையினரின் திறனைக் குறைப்பதற்காக யேமனில் அவா்களது நிலைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

Exit mobile version