சர்வதேச சந்தையில் தங்க விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதுடன் , ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 அமெரிக்க டொலரைத் தாண்டி, புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
இந்த அதிரடி உயர்வுக்கு பல உலகளாவிய காரணங்கள் அடிப்படையாக அமைந்துள்ளதுடன், அமெரிக்காவில் ஏற்பட்ட அரசு முடக்கம், டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர், புவிசார் அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்டவை தங்க விலை உயர்விற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதன் விளைவாக, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்க விலை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக உலக சந்தைகளில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தைத் தேர்வு செய்துள்ளனர்.
“இந்த அரசியல் பிரச்சினைகள் நீண்ட காலம் நீடிக்காது எனவும், அடுத்த 3 முதல் 4 வாரங்களில் சூழ்நிலை சீராகும் பட்சத்தில், தங்க விலையின் தற்போதைய உயர்வு சரிவைச் சந்திக்கலாம்” என்று நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
அதாவது தற்போது காணப்படும் இந்த உச்ச நிலை நீண்ட காலம் நீடிக்காது எனவும், தங்கம் அடுத்த சில நாட்களில் 2 முதல் 3 சதவீதம் வரை சரியும் வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தங்கம் தற்போது வரலாற்று உச்சத்தை அடைந்தாலும், இது நிலையானது அல்ல. வரவிருக்கும் வாரங்களில் சிறிய சரிவு ஏற்படும், அதை பயன்படுத்தி தங்கம் வாங்குவது முதலீட்டாளர்களுக்கு ஒரு புத்திசாலித்தனமான வாய்ப்பாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கொழும்பு தங்க விலை நிலவரம்
அந்த வகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய ( 09) தங்க விற்பனை தரவுகளின் படி,
22 கரட் தங்கத்தின் ஒரு பவுன் – 313.950 ரூபாவாகவும்,22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 39.250 ரூபாவாகவும்
24 கரட் தங்கத்தின் ஒரு பவுன் – 342,500 ஆகவும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42.810 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
21 கரட் தங்கத்தின் ஒரு பவுன் – 299,700 ஆகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 37,460.00 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று 4,000 டொலரைத் தாண்டியுள்ளதால் இலங்கையிலும் தங்க விலை சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.