வயநாடு நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

24 66a9bf0927b32

வயநாடு நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய1000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், நிலச்சரிவில் சிக்கிய 100 பேரின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து 2-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக மாவட்டம் நீலகிரி கூடலூர் புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இவர், கேரளாவில் உறவினர் வீட்டில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வயநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த காளிதாஸ் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இரங்கல் செய்தியில், “நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (34) என்பவர் கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தபோது இன்று (ஜூலை 30) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version