மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்க வான்பரப்பில் விமானங்களை இயக்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
குறித்த பிராந்தியங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வான்பரப்பு பாதுகாப்பற்றதாக மாற்றமடைந்துள்ளது.
விமானங்களின் தொடர்பு சாதனங்கள் (Communication) மற்றும் பூகோள வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்புகளில் (GPS) திடீர் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இது ஒரு “ஆபத்தான சூழலாக” அமையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அடுத்த 60 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் மெக்சிக்கோ, பனாமா, பொகோட்டா (Bogota), கயாகுவில் (Guayaquil) மசாட்லான் (Mazatlan) பெருங்கடல் பகுதி மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் வான்பரப்புகள் பொருந்தும்.
கடந்த ஜனவரி 3-ஆம் திகதி அமெரிக்க விசேட படையினர் மேற்கொண்ட அதிரடி வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது:
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நிலவும் போர் மேகங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களே தற்போதைய வான்வழி எச்சரிக்கைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது பயணப் பாதைகளை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. இதனால் அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான விமானப் பயண நேரம் மற்றும் கட்டணங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

