லெபனானின் பாதுகாப்புச் சூழல் மிகவும் நிலையற்றதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளதால், அங்கு தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. வணிக ரீதியிலான விமானச் சேவைகள் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும்போதே, தாமதிக்காமல் வெளியேறுவது அவசியம் என சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
லெபனான் முழுவதும், குறிப்பாக தெற்குப் பகுதி, பெக்கா மற்றும் தலைநகர் பெய்ரூட்டின் சில பகுதிகளில் தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதை தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் பாதுகாப்பற்ற சூழலை அதிகரித்துள்ளதால், அமெரிக்கர்கள் தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
லெபனானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க குடிமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது. நிலைமை மோசமடைந்தால், தூதரகம் தனது குடிமக்களை வெளியேற்றுவதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் மோதலின் தாக்கம் காரணமாக லெபனானில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பிராந்தியத்தின் பிற பகுதிகளிலும் வன்முறை பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், சர்வதேச நாடுகள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன