கடந்த 2022-ஆம் ஆண்டு அப்போதைய ட்விட்டர் (தற்போது X) நிறுவனத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது, அதன் உரிமையாளர் ஈலோன் மஸ்க் வெளியிட்ட கருத்துகள் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ கூட்டாட்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த முக்கிய வழக்கில், ஜூரி உறுப்பினர்கள் ஒருமனதாக இந்த முடிவை அறிவித்தனர். மஸ்க்கின் சமூக வலைதளப் பதிவுகள் சந்தை விதிகளை மீறியுள்ளதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் (Bots) குறித்த தரவுகள் மற்றும் 44 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் இருந்து தாம் பின்வாங்கப் போவதாக மஸ்க் அவ்வப்போது வெளியிட்ட கருத்துகள், திட்டமிட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றும் வகையில் அமைந்திருந்ததாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. மஸ்க்கின் இத்தகைய முறையற்ற கருத்துகளால், ட்விட்டர் பங்கொன்றின் விலை சுமார் 3 டொலர் முதல் 8 டொலர் வரை செயற்கையாகக் குறைக்கப்பட்டதாக ஜூரி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இது நிறுவனத்தின் சந்தை மதிப்பைப் பாதித்ததுடன் முதலீட்டாளர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இந்த வழக்கைத் தொடர்ந்த பிரையன் பெல்கிரேவ் போன்ற சிறு முதலீட்டாளர்கள், மஸ்க்கின் ட்வீட்களை (Tweets) நம்பித் தமது பங்குகளைக் குறைந்த விலைக்கு விற்றுப் பாரிய நிதி இழப்பைச் சந்தித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். “நான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டேன்” என பெல்கிரேவ் அளித்த சாட்சியம் வழக்கில் திருப்புமுனையாக அமைந்தது. ஒரு பெரும் தொழிலதிபர் தனது சமூக வலைதள அதிகாரத்தைப் பயன்படுத்திப் பங்குச் சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த முயன்றது கண்டிக்கத்தக்கது எனப் பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பின் விளைவாக, பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களுக்குப் பல மில்லியன் டொலர்களை நஷ்டஈடாக வழங்க வேண்டிய கட்டாய நிலை ஈலோன் மஸ்க்கிற்கு ஏற்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே டெஸ்லா (Tesla) நிறுவனப் பங்குகள் தொடர்பாகப் பல வழக்குகளை எதிர்கொண்டு வரும் மஸ்க்கிற்கு, இந்தத் தீர்ப்பு மற்றுமொரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் நிதிச் சந்தை குறித்துப் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்புணர்வை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.