கனடா தனது வான் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தசாப்த கால பாதுகாப்பு உறவில் முன்னெப்போதும் இல்லாத பதற்றம் உருவாகியுள்ளது.
கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹூக்ஸ்ட்ரா (Pete Hoekstra), கனடாவின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கனடா 88 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கினால், வட அமெரிக்கப் பிராந்தியத்தைப் பாதுகாக்க அமெரிக்க போர் விமானங்கள் கனடாவின் வான்வெளியில் அடிக்கடி பறக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த முடிவு வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளையகத்தின் (NORAD) தற்போதைய செயல்பாட்டு முறையையே மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா மீது விதித்துள்ள வர்த்தக வரிகள் மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பான பேச்சுகள் கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசாங்கத்தைச் சிந்திக்க வைத்துள்ளது.
இந்த 19 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் செலவு தற்போது 27 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவை முழுமையாகச் சார்ந்திருக்காமல், தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க மாற்று வழிகளை கனடா ஆராய்ந்து வருகிறது.
அமெரிக்காவின் F-35-க்குப் பதிலாக, ஸ்வீடனின் Saab நிறுவனத்திடமிருந்து Gripen E போர் விமானங்கள் மற்றும் GlobalEye கண்காணிப்பு விமானங்களை வாங்குவது குறித்து கனடா ஆலோசித்து வருகிறது. Gripen விமானங்கள் கனடாவின் ஆர்க்டிக் காலநிலைச் சூழலுக்கு மிகவும் ஏற்றவை என்றும், பராமரிப்புச் செலவு குறைவு என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், ஏற்கனவே 16 F-35 விமானங்களுக்குப் பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்வது கனடாவுக்குப் பாரிய இராஜதந்திர மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

