பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால் இப்படி எல்லாம் நடக்கும் என பயம் காட்டியாவது புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இறங்கிவிட்டது பிரித்தானிய அரசு.
எப்படியாவது பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிட்டால் போதும், உணவு விநியோகம் செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்களை, இனி டிஜிட்டல் அடையாள அட்டை போன்ற அனுமதிகள் இருந்தால் மட்டுமே வேலை செய்யமுடியும் என்ற நிலையை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது பிரித்தானிய அரசு.
புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதால், அவர்களை பிரான்சிலேயே தடுத்து நிறுத்த பிரான்சுடன் ஒப்பந்தம், ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் ரப்பர் படகுகளை ஜேர்மனியில் சேகரித்து வைப்பதால், அவற்றை பறிமுதல் செய்ய ஜேர்மனியுடன் ஒப்பந்தம் என தொடர்ந்து புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது பிரித்தானிய அரசு.
இந்நிலையில், புலம்பெயர்ந்தோர் சொகுசு ஹொட்டல்களில் தங்கவைக்கப்படுவதையும் நிறுத்தி, அவர்களை மட்டமான இடங்களில் தங்கவைத்தாலாவது புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய காட்டும் ஆர்வம் குறையுமா என்பதையும் சோதித்துப்பார்க்கவும் தயாராகிவிட்டது அரசு.
அவ்வகையில், புலம்பெயர்ந்தோர் தங்குவதற்காக முகாம்களை அமைப்பதற்காக நிலங்களை தேடும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
புலம்பெயர்ந்தோர் இனி ஹொட்டல்களுக்கு பதிலாக, அந்த இடங்களில் அமைக்கப்படும் முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள்.
அப்படிப்பட்ட முகாம்களை அமைக்கும் பணியில் ராணுவத்தை களமிறக்க பிரித்தானிய அரசு தயாராகிவருகிறது. ராணுவ தலைவர்களும் அதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.