வெனிசுலா மீது திடீர் இராணுவத் தாக்குதலை நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைச் சிறைபிடித்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
வெனிசுலாவின் பாரிய எண்ணெய் இருப்புகளை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவிற்குச் சாதகமான ஒரு நிலையான அரசாங்கம் அமையும் வரை அமெரிக்க இராணுவம் வெனிசுலாவில் தங்கியிருக்கும்.
அடுத்தகட்ட எச்சரிக்கை: அமெரிக்காவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டால், மீண்டும் ஒருமுறை இராணுவத் தாக்குதலை நடத்தத் தயங்கப்போவதில்லை என டிரம்ப் வொஷிங்டனில் நேற்று எச்சரித்துள்ளார். “மதுரோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமக்கு எதிராகச் செயல்பட்டால் கொலம்பியா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், கியூபாவின் கம்யூனிச ஆட்சி தானாகவே வீழும் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் “வெனிசுலா தனது இயற்கை வளங்களைத் தற்காத்துக் கொள்ளும்.”
இருப்பினும், அமெரிக்காவுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கண்ணியமான உறவை ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் ஒரு இணக்கமான போக்கை வெளிப்படுத்தியுள்ளார்.