கனடாவில் நடுங்கவைக்கும் துப்பாக்கிச் சூடு: பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய பெண்! 

92a327cd d946 4aff b16e fdb9c5ceabfb 54149f8c

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜ் எனும் அமைதியான நகரத்தை உலுக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிதாரி உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் பள்ளிக்குள்ளேயே ஆறு பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு வீட்டிற்குள் மேலும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தனர். படுகாயமடைந்த மற்றுமொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக ராயல் கனடியன் மவுண்டட் போலீஸார் (RCMP) உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியது ஒரு பெண் என்பது தற்போது வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது. தாக்குதலின் போது வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ எச்சரிக்கையில், பழுப்பு நிற முடி கொண்ட உடையணிந்த ஒரு பெண்ணே சந்தேக நபர் என விவரிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அந்தப் பெண் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப்படுகிறது.

தற்போது சந்தேக நபர்கள் யாரும் தப்பியோடவில்லை என்றும், பொதுமக்களுக்கு மேலதிக அச்சுறுத்தல் இல்லை என்றும் போலீஸார் அறிவித்துள்ளனர். சுமார் 2,400 பேர் மட்டுமே வாழும் இந்தச் சிறிய மலைப்பகுதிக் கிராமத்தில் இத்தகைய வன்முறை நிகழ்ந்திருப்பது கனேடிய மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளிக்குள் நுழைந்த அதிகாரிகள் பல மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் காயமடைந்தும், உயிரிழந்தும் கிடப்பதைக் கண்டனர். இது ஒரு நெஞ்சைப் பிளக்கும் காட்சி,என்று போலீஸ் கண்காணிப்பாளர் கென் ஃபிலாய்ட் மிகுந்த வருத்தத்துடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் உள்ளூர் மருத்துவ மையங்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்த வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன மற்றும் இந்தத் தாக்குதலுக்கான உண்மையான பின்னணி என்ன என்பது குறித்துப் புலனாய்வுத் துறையினர் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் நினா க்ரீகர் இச்சம்பவம் குறித்துத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். “எங்கள் எண்ணங்கள் அனைத்தும் டம்ளர் ரிட்ஜ் மக்களுடன் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். வான்கூவரில் இருந்து சுமார் 1,155 கிமீ தொலைவில் உள்ள இந்தத் தொலைதூர நகராட்சியில் நடந்த இந்தச் சம்பவம், கனடாவின் பாதுகாப்புக் கட்டமைப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் நடத்திய பெண் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவியா அல்லது அங்கு பணியாற்றியவரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை. உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒரு பெண்ணால் இவ்வளவு பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது சர்வதேச ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே கனடா சந்தித்துள்ள இந்த மிகப்பெரிய துயரம், துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்த சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

 

 

Exit mobile version