கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்திற்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது கடும் வர்த்தக வரிகளை (Trade Tariffs) விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சுகாதாரம் தொடர்பான வட்ட மேசை மாநாட்டின் போது இது குறித்துப் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்ததாவது, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கிரீன்லாந்து ஒரு மிக முக்கியமான மூலோபாயப் பகுதி என்று அவர் வலியுறுத்தினார்.
“எமது இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்காத நாடுகள் மீது நான் வர்த்தக வரிகளை விதிக்கக்கூடும். தேசியப் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து எங்களுக்குத் தேவையானது,” என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா மிகவும் தீவிரமாக இருப்பதை வெள்ளை மாளிகையின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. கிரீன்லாந்தை கையகப்படுத்துவது அமெரிக்காவின் தற்போதைய பாதுகாப்பு முன்னுரிமைகளில் ஒன்று.
இந்த இலக்கை அடைவதற்காக அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்துவது ஒரு ‘தெரிவாக’ (Option) எப்போதும் மேசையில் இருக்கும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் ஒரு தன்னாட்சிப் பிரதேசமாகும். இதனை விலைக்கு வாங்கவோ அல்லது கையகப்படுத்தவோ ட்ரம்ப் நிர்வாகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இது சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வர்த்தக வரிகள் மற்றும் இராணுவப் பயன்பாடு குறித்த அவரது கருத்துக்கள் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.