பதவியேற்புக்கு மறுநாள்: புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் துவங்கவிருக்கும் பாரிய நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், திங்கட்கிழமை, அதாவது, ஜனவரி மாதம் 20ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.
சரியாக அதற்கு மறுநாள், அதாவது செவ்வாய்க்கிழமை, புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பெரிய நகரங்களில் ஒன்றும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான சிகாகோ நகரில், புலம்பெயர்ந்தோரைக் குறிவைத்து பாரிய ரெய்டு ஒன்றை நடத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக Wall Street Journal ஊடகம் தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று துவங்கும் அந்த ரெய்டு, அந்த வாரம் முழுவதும் நீடிக்க இருப்பதாகவும், அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அந்த ரெய்டுக்காக 100 முதல் 200 அதிகாரிகளை அனுப்ப இருப்பதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
உண்மையில், சிகாகோ மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதுமே ரெய்டுகள் நடக்க இருப்பதாக தெரிவிக்கிறார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஒருவர்.
நியூயார்க்கிலும், மியாமியிலும், ஏன் அமெரிக்கா முழுவதுமே ஆபரேஷன்களையும், கைது நடவடிக்கைகளையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என்று கூறுகிறார் அவர்.
ஆக, செவ்வாயன்று சிகாகோவில் நடைபெற இருக்கும் ரெய்டு, நாடு முழுவதும் புலம்பெயர்ந்தோரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகளின் துவக்கமே என்கிறார் புலம்பெயர்தல் துறை அதிகாரியான Tom Homan என்பவர்.