வடக்கு இந்தோனேசியாவில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரான மனாடோ (Manado) நகரில் அமைந்துள்ள ‘டமாய்’ (Damai) முதியோர் இல்லம். ஞாயிற்றுக்கிழமை (28) இரவு சுமார் 8:30 மணியளவில் தீ பரவத் தொடங்கியுள்ளது. சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இரவு 9:30 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் தத்தமது அறைகளுக்குள்ளேயே சடலங்களாக மீட்கப்பட்டதாகத் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் முதியவர்கள் அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததால், அவர்களால் விரைவாக வெளியேற முடியாமல் போனதே அதிக உயிரிழப்புகளுக்குக் காரணம் எனத் தீயணைப்புத் துறைத் தலைவர் ஜிம்மி ரோட்டின்சுலு தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.