ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக முக்கிய ரயில் சேவைகள் ஸ்தம்பித்தன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
டோக்கியோவின் மிக முக்கியமான போக்குவரத்து வழித்தடங்களான யமனோட் (Yamanote) மற்றும் கெய்ஹின்-டோஹோகு (Keihin-Tohoku) பாதைகளின் சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.
இந்தத் திடீர் முடக்கத்தால் சுமார் 6,73,000 பயணிகள் ரயில் நிலையங்களிலும், ரயில்களுக்குள்ளும் சிக்கித் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்கள் பாதியில் நின்றதாலும், கூட்ட நெரிசலாலும் பயணிகள் உடல்நலக் குறைபாடுகளுக்கு உள்ளாகினர். 20 முதல் 60 வயதுடைய 10 பேர் குமட்டல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருந்த 5 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தீயணைப்புத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தமாச்சி (Tamachi) நிலையத்திற்கு அருகிலுள்ள தண்டவாளப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு மின்மாற்றியில் (Transformer) இருந்து தீப்பிழம்புகள் வெளியேறியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தீ விபத்து தான் மின்தடைக்குக் காரணமா அல்லது மின்தடை ஏற்பட்ட பின் தீ விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் சேவைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. எவ்வாறாயினும், இன்றைய மாலை நேர அலுவலகப் போக்குவரத்து இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

