காசா மனிதாபிமான நெருக்கடி குறித்து இலங்கை கரிசனை

25 683fd56e3aa05

இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் உருவாகியுள்ள காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிக்காக இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.

இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசின் சார்பில், ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்களையும் தீர்மானங்களையும் அடிப்படையாகக் கொண்டு பலஸ்தீன மக்களின் சொந்த நாட்டை உருவாக்கும் உரிமைக்கு இலங்கை வழங்கும் உறுதியான ஆதரவை மீளவும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் இஹாப் கலைல், அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது காஸா நிலைமை குறித்து விஜித ஹேரத் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

இரு நாட்டுத் தீர்வுத் திட்டமே மிகவும் பொருத்தமானது எனவும் அதுவே அமைதிக்கு வழியமைக்கும் எனவும் ஹேரத் தெரிவித்துள்ளார்.

1967 எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்வுத் திட்டங்களை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன தூதுவர் இஹாப் கலைல், காசாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து அமைச்சரிடம் விளக்கமளித்ததோடு, இலங்கை-பலஸ்தீன இருதரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடினார்.

பலஸ்தீனத்திற்கான இலங்கையின் நிலையான ஆதரவை, பிராந்திய மற்றும் உலகளாவிய மேடைகளில் வெளிப்படுத்தியதற்காக பலஸ்தீன தூதுவர் நன்றி பாராட்டியுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் வேலைத்திட்ட முகவரியின் (UNRWA) மூலம் காசா குழந்தைகள் நிதிக்காக இலங்கை வழங்கிய ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை தொடர்பிலும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Exit mobile version