சவூதி அரேபியாவில் ட்விட்டர் பதிவுகளுக்காக ஒரு பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
34 வயது சல்மா அல் ஷெஹாப் பொது ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்றவர்களுக்கு உதவியதாக இம்மாதம் 9ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
இரு பிள்ளைகளுக்குத் தாயான ஷெஹாப் பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் படித்துக்கொண்டிருந்தார். சவூதி அரேபியாவில் பெண்கள் உரிமைகள் குறித்து அவர் அடிக்கடி ட்விட்டரில் பதிவிட்டு வந்துள்ளார். ட்விட்டரில் சுமார் 2,600 பேர் அவரைப் பின்தொடர்கின்றனர்.
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பல்கலைக்கழக விடுமுறைக்காக சவூதி அரேபியாவுக்குத் திரும்பியபோது ஷெஹாப் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக அவருக்கு 6 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரின் தண்டனை கடுமையாக்கப்பட்டது. தண்டனைக்கு எதிராக 30 நாட்களுக்குள் ஷெஹாப் மேன்முறையீடு செய்யலாம்.
#world