பங்களாதேஷின் (Bangladesh) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina), டாக்காவில் உள்ள தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லத்திற்கு நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தீ வைத்ததை அடுத்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர், ஒரு கட்டமைப்பை அழிக்கலாம் ஆனால் வரலாற்றை என்றும் அழிக்க முடியாது. வரலாறு அதன் பழிவாங்கலை மேற்கொள்ளும் என்பதையும் போராட்டக்காரர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டு பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக மாணவர்கள் பதவியில் இருந்து விலக கோரி முன்னெடுத்த மாபெரும் போராட்டத்திற்கு பின்னர், அவர் இந்தியாவிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், பங்களாதேஷ் மக்கள் அவருக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வரும் நிலையில், தற்போது டாக்காவில் அமைந்துள்ள அவரின் தந்தையின் இல்லத்திற்கு போராட்டக்கார்கள் தீயிட்ட நிலையில் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, அவர் கருத்து வெளியிடுகையில், நான் பங்களாதேஷ் மக்களிடம் நீதி கேட்கிறேன். நான் என் நாட்டிற்கு எதுவும் செய்யவில்லையா? பிறகு ஏன் இவ்வளவு அவமரியாதை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், என் சகோதரியும் நானும் பற்றிக்கொண்ட ஒரே நினைவு எனது தந்தையின் வீடு. அது அழிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டமைப்பை அழிக்க முடியும், ஆனால் வரலாற்றை அழிக்க முடியாது என்று மிக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வரலாறு அதன் பழிவாங்கலை மேற்கொள்ளும் என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என ஹசீனா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.