வெளிநாட்டில் இஸ்ரேலிய தூதரகம் மீது பயங்கரவாத தாக்குதல்: துரிதமாக செயல்பட்ட பொலிசார்
செர்பியாவில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகம் மீது குறுக்கு வில் ஆயுததாரி ஒருவர் தாக்குதல் முன்னெடுத்த சம்பவத்தில் பொலிசார் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெல்கிரேடில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே குறித்த தாக்குதலானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய தாக்குதலை செர்பியா மீதான பயங்கரவாத தாக்குதல் என்று அந்த நாட்டின் உள்விவகார அமைச்சர் Ivica Dacic குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி உயிருக்கு போராடுவதாகவும், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர்,
அருங்காட்சியகம் எங்கே என்று கேட்டு பலமுறை தன்னை அணுகிய ஒருவரால் காவலர் கழுத்தில் காயம்பட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பொலிசார் பதிலுக்கு பலமுறை துப்பாக்கியால் சுட்டதில், தொடர்புடைய ஆயுததாரி சம்பவயிடத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
இது செர்பியா மீதான பயங்கரவாத தாக்குதல் என்றே தாம் நம்புவதாக அமைச்சர் Ivica Dacic குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் ஒரு அமைப்பு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு நம்புவதாகவும், ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பெல்கிரேட் முழுமையும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ல், கால்பந்து மைதானத்தைத் தாக்க சதி செய்ததற்காக சன்னி வஹாபி பிரிவைச் சேர்ந்த நான்கு ஆதரவாளர்களுக்கு செர்பியா சிறைத்தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.