வெளிநாடுகளுக்குச் சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சவுதி அரேபிய அரசு சுமார் 56,000 பாகிஸ்தானியர்களை ஒரே நேரத்தில் அந்நாட்டிலிருந்து வெளியேற்றி பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.
புனிதப் பயணம் (உம்ரா) மேற்கொள்வதற்காக சவுதிக்கு வரும் பாகிஸ்தானியர்களில் பலர், மெக்கா மற்றும் மதினா ஆகிய புனித நகரங்களில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் புனிதத் தலங்களில் இவ்வாறான செயல்கள் அதிகரித்ததால், அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனைகளைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்:
பிச்சை எடுக்கும் நோக்கில் உம்ரா விசாவைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற 6,000-க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் குடிவரவு அதிகாரிகள் அந்நாட்டு விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சர்வதேச அளவில் பிச்சை எடுப்பவர்களில் 90 சதவீதமானோர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என அண்மையில் வெளிவந்த அறிக்கைகள் பாகிஸ்தானுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
சவுதி அரேபியாவின் இந்த அதிரடி நடவடிக்கை ஏனைய வளைகுடா நாடுகளிலும் பாகிஸ்தானியர்களுக்கான விசா கட்டுப்பாடுகள் அதிகரிக்க வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.