எரிமலைகள் அதிகம் காணப்படும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில், கடந்த 13 மாதங்களாக அமைதியாக இருந்த புகழ்பெற்ற சகுராஜிமா (Sakurajima) எரிமலை தற்போது வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அங்கு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சகுராஜிமா எரிமலை: ககோஷிமா (Kagoshima) நகரத்தின் அருகில் அமைந்துள்ள இந்த எரிமலை, தற்போது நெருப்பை உமிழத் தொடங்கி இருக்கிறது.
அடுத்தடுத்து 2 முறை நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்ததால், வானில் கிட்டத்தட்ட 4.4 கிலோ மீட்டர் தூரம் உயரத்திற்குக் கரும்புகை மண்டலமாகவும், புழுதியாகவும் காட்சி அளித்தது.
இந்த எரிமலை 2019ஆம் ஆண்டு நெருப்புப் பிழம்புகளை உமிழ்ந்த போது, வானில் 5.5 கி.மீ. தூரம் புகை மண்டலமாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.
எரிமலை வெடிப்பின் காரணமாக வான்வழிப் பாதையில் புகை மற்றும் சாம்பல்கள் நிரம்பிக் காணப்படுவதால், அந்நாட்டின் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ககோஷிமா விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளும் தாமதமாகி இருக்கின்றன.